இஸ்லாத்தின் பார்வையில் உருவம் வரைதல் ஆகுமானதா Posted on : 2014-05-25 Print

மாறாக சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்தின்மீது எறிகின்றோம். அது (அசத்தியமாகிய) அதன் தலையைப் பிளந்துவிடுகின்றது. எனவே அது அழிந்தும் விடுகின்றது............(21:18)
 
……………………………………………………………………………………………………………………………………
 
பெயர் மாற்றங்களுடன் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படும் என்பதற்கு ஒரு அடையாளத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் முன்னறிவிப்புச்செய்துள்ளார்கள்.
 
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:-
 
எனது உம்மத்தில் சில மனிதர்கள் மதுபானம் அருந்து வார்கள். (தவறைமறைக்க) அதன் பெயரல்லாததைக் கொண்டு அதற்குப் பெயர்சூட்டிக்கொள்வார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)
 
எந்தவொரு அம்சத்தையும் நாம் அழ்ழாஹ்வின் வரம்புகளைமீறிவிடக்கூடாது எனும் நல்ல நோக்கத்துடனேயே ஒரு முஸ்லிம் அணுக வேண்டும். நாம் செய்கின்ற செயலை நிரூபித்துவிட வேண்டும் என்கின்ற தீய எண்ணம் எங்களிடம் இருக்குமானால் அத்தகையதீயவர்களை அழ்ழாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை என அவன்அவனது அல்குர்ஆனில் கூறுகின்றான்.
 
எமது சென்ற ஆய்வில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஹுத்பாவில் சூரா காப் ஓதுவது கட்டாயமா? எனும் தலைப்பில் நாம் எழுதியிருந்த ஆக்கத்தைப்படித்த ஒரு சிலர் புரட்சி எனும் சஞ்சிகையில் இஸ்லாத்தில் உருவப்படம்வரைவது கூடுமா? கூடாதா? எனும் தலைப்பில் வெளியானகட்டுரைபற்றிய தெளிவை எம்மிடம் வேண்டினர் எனவே நாம் எமது இந்த ஆய்வில் புரட்சி சஞ்சிகையில் வெளியான கட்டுரையை மையமாகவைத்து உருவப்படம் வரைதல் சம்பந்தமான இஸ்லாத்தின் தெளிவானசட்டத்தை ஆதாரங்களுடன் உங்களுக்குத் தருகின்றோம்.
 
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எது உருவம் என்பதை அதனது சட்டத்தைக் கதைப்பதற்கு முன்னர் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.இந்த வரைவிலக்கணத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.      
 
 
 
1- உருவம் என்பது தலையாகும். எனவே (உடலைவிட்டும்)  தலைதுண்டிக்கப்  பட்டுவிட்டால் (அது) உருவம் அல்ல.
(ஜா.ஸகீர்: முஃஜமுல் இஸ்மாஈலிய்யி - ஸஹீஹ்)
 
எனவே இஸ்லாமியக்கண்ணோட்டத்தில் உருவம் என்றால்தலையாகும். தலை இல்லாத உடம்பைத் தமிழிலே முண்டம் எனக்கூறுகின்றோம்.அதேபோன்று இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் தலை இல்லாத உடலை உருவம் எனக்கூறப்படமாட்டாது. அதே நேரத்தில் உடம்பில் எந்தவொரு பகுதியும் இல்லாமல் தலை மட்டும் இருந்தால் அதனை இஸ்லாம் உருவம் என்பதாகவே கணிக்கின்றது என்பதனைஇந்த ஹதீஸ் எமக்குக் கூறுகின்றது.
 
ஆகவே உருவம் என நாம் இங்கு எழுதும்போது அது  தலையைக் குறிக்கக்கூடிய பிரயோகம் என்பதை வாசகர்களாகிய நீங்கள்  மனதில்வைத்துக் கொள்ளுங்கள்.
 
மனித செயல்களின் ஒரு பகுதி நாம் அன்றாடம் எமது உலகத்தேவைகளுக்காக செய்யக்கூடிய செயல்கள். இவற்றை அறபியிலே முஆமலாத் எனக்கூறப்படும். இவற்றின் இஸ்லாமியத் தீர்ப்பு இவை கூடாது என்பதற்குரிய ஆதாரங்கள் இல்லாதவரையில் இவற்றை நாம்செய்யலாம் என்பதாகும்.
 
உருவம் அமைத்தல் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இப்போது அவசியம்ஏற்பட்டுள்ளதால் அதனைத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் அல்லது ஸஹீஹான ஹதீஸ் ஏதும் இருக்கின்றதா? என்பதை நாம் அலசிப் பார்ப்பது கடமையாகும்.
 
இதுபற்றி புரட்சி சஞ்சிகையிலுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் நல்லதொரு  அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்தக் கட்டுரையில்  அதனை நிறைவேற்றாததனால் அவர்களது முடிவும் இஸ்லாத்திற்கு முரணாகவே அமைந்துவிட்டது.
 
 
கட்டுரையாளர் எழுதியிருப்பதாவது:-
 
ஆனாலும் ஒரு முஃமின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றுக்கொன்று முரணாக பேசமாட்டார்கள் என்று முழுமையாக நம்பியிருப்பான். 
 
இவ்விடயத்தில் சரியான தெளிவைப் பெறவேண்டுமென்றால் எல்லா ஹதீஸ்களின் கருத்துகளையும், ஒன்று சேர்த்து புரிய வேண்டும்.
(புரட்சி மார்ச் 2 0 0 9 பக்: 33)
 
கட்டுரையாளர் இங்கு கூறியிருப்பது மிகப்பெரியதொரு உண்மையாகும். இஸ்லாத்தின் எந்த அம்சத்தை அறிந்து கொள்வதானாலும் இந்த வழிமுறையைத்தான் நாம் கையாள வேண்டும். எமது சமூகத்தில் இந்தஉண்மையைக் கடைபிடிக்காததன் காரணமாகத்தான் அகீதா சம்பந்தமான விடயங்களில் கூட தவறிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்டுரையாளர் இந்த உண்மையைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் அதிலே மாற்றம்செய்திருப்பது ஆச்சரியப்படவைக்கின்றது. அதாவது சரியானதெளிவைப் பெறுவதற்குஎல்லா ஹதீஸ்களின்  கருத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டும் என எழுதிய அந்தக் கட்டுரையாளர் உருவம் அமைத்தல் தொடர்பான எல்லா ஸஹீஹான ஹதீஸ்களையும் தமது கட்டுரையில் இடம்பெறச் செய்யவில்லை. இதனை நாம் முன்வைத்திருக்கக்கூடிய முதல் ஹதீஸிலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.
 
உருவம் சம்பந்தமான ஹதீஸ்களில் முக்கியமான இரண்டு சட்டங்கள்கூறப்பட்டுள்ளன. உருவம் சம்பந்தமான இஸ்லாத்தின் சட்டங்களைக்கூற முற்பட்டவர்கள் அதுபற்றிய முக்கியமான இரண்டு சட்டங்களையும் வெவ்வேறாக விளங்கிக்கொள்ளாததும் அவர்கள் உருவம் சம்பந்தமானஇஸ்லாமிய சட்டத்தைப் பிழையாக முன் வைப்பதற்கு ஒரு காரணமாகும். உருவம் அமைத்தல், உருவம் வீட்டினுள்ளே இருத்தல்ஆகிய இரண்டு செயல்கள் பற்றி இஸ்லாம் வெவ்வேறான சட்டங்களைக் கூறியுள்ளது.
 
முதலில் உருவம் அமைத்தலைக் கண்டிக்கக்கூடிய ஹதீஸ்களை உங்களுக்குத்தருகின்றோம். உருவம் வரைதல் எனும் வார்த்தையைத் தவிர்த்துவிட்டு, உருவம் அமைத்தல் என நாம் குறிப்பிடுவதற்குக்காரணம் வரைதல் எனக்குறிப்பிடும்போது மக்கள் கையால் வரைகின்ற உருவம் பற்றித்தான் ஹதீஸ்களில் எச்சரிக்கப் பட்டுள்ளது எனத்தவறாக விளங்கிக்கொள்வர். எனவே நாம் உருவம் அமைத்தல் எனும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றோம். வரைவதன்மூலம், புகைப்படக் கருவியின் மூலம், வீடியோ கருவி மூலம், உளிகளின் மூலம் என எந்தெந்த வழிகளிலெல்லாம் உருவம் உருவாக்கப்படுகின்றதோ அவை அனைத்தையும் குறிக்கக் கூடியதாகவே ஹதீஸ்களின் சொற்கள் அமைந்துள்ளன.
 
 
2 -  ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்.
இந்த உருவங்களை உருவாக்கக்கூடியோர். மறுமையில்தண்டிக்கப்படுவார்கள். 'நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள்" எனஅவர்களுக்குக் கூறப்படும்.
(ஸஹீஹுல் புஹாரி கி. லிபாஸ் 87)
 
 
3 -  ஸஈத் பின் அபில் ஹஸன் (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறுகின்றார்கள்:-
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூஅன்ஹூ)  அவர்களிடம் ஒரு மனிதர்வந்து: "நான் இந்த உருவங்களை  அமைக்கக் கூடியவன். அதிலேஎனக்குத் தீர்ப்புக் கூறுவீராக! "எனக் கேட்டார். அதற்கு "என்னிடம்நெருங்குவீராக "எனக்கூறினார்கள். உடனே அவர்களுக்கு நெருக்கமாகவந்தார். பின்பும் "என்னிடம் நெருங்குவீராக" எனக்கூறினார்கள். (அவர்) நெருங்கி வந்ததும் அவரது தலையிலே தங்களது கையை வைத்து "ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களிடமிருந்து செவிமடுத்ததை உமக்குக் கூறுகின்றேன். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:- உருவம் அமைக்கக்கூடிய ஒவ்வொருவரும் நரகிலேஇருப்பார். (அவர்) அமைத்த ஒவ்வொரு உருவத்திற்கும் பகரமாக ஒரு உயிர் ஏற்படுத்தப்படும். அவை அவனை நரகிலே நோவினை செய்துகொண்டிருக்கும். [இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)  "கட்டாயம் நீர் செய்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால் மரத்தையும், உயிரற்றதையும் செய்வீராக!" எனவும் கூறினார்கள்.]
(ஸஹீஹ் முஸ்லிம் கி. லிபாஸ் 26)
 
(குறிப்பு: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் வாழ்ந்ததனால் உயிரற்றது எனக்கூறியுள்ளார்கள். மரங்களுக்கும் உயிருள்ளது என்பதால் தலை இல்லாததை வரைந்துகொள் என்பதாக இதனை விளங்கிக்கொள்ளவும்.)
 
 
4 –  ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) கூறுகின்றார்கள்:-
 
(ஒருமுறை) ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) என்னிடத்தில் நுழைந்தார்கள். நானோ ஒரு திரைச்சீலையைக்கொண்டு (சுவரை) மறைத்திருந்தேன். அதிலே உருவம் இருந்தது.  எனவே ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது.  பின்னர் திரைச்சீலையை எடுத்து, அதனைக் கிழித்தார்கள். பின்பு  (அவர்கள்)  கூறியது:-
 
"நிச்சயமாக எவர்கள் அழ்ழாஹ்வின் படைப்பைப்போன்று உருவாக்குகின்றார்களோ அவர்கள் மறுமைநாளில் தண்டனையால் மனிதர்களில் மிகக்கடினமானவர்கள் ஆவார்கள்."
(ஸஹீஹ் முஸ்லிம் கி. லிபாஸ் 26)
 
 
5 -  அபூ ஸுர்ஆ (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) மர்வான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களது வீட்டினுள் அபூஹுரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுடன் நுழைந்தேன். அதிலே உருவங்கள் இருப்பதைக் கண்டார்கள்.